சர்கார் திரைப்படத்தால் பரபரப்பு விவாத பொருளாகியுள்ள 49P சட்டப்பிரிவு.. சட்டம் சொல்வது என்ன?

tamil news

சென்னை: சர்கார் திரைப்படத்தின் மூலம், இந்திய தேர்தல் சட்டப்பிரிவு 49P (1961) தமிழக மக்களிடையே நன்கு பரிட்சையமாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் சம கால அரசியல் பலவற்றை தொட்டுச் செல்கிறது. அதில் கதையின் கரு என்பது கள்ள ஓட்டு தொடர்பானது. கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று புலம்பாமல், அதற்கு தீர்வையும் இந்த திரைப்படம் முன் வைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

கள்ள ஓட்டு

திரைப்பட கதைப்படி, ஹீரோ விஜய், ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் விஜய். அப்போதுதான், இந்த தேர்தல் நடைமுறைகளுக்கான சட்டப்பிரிவு 49P பற்றி ஹீரோவே விளக்கம் அளிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தமிழ் திரைப்படங்கள் எதிலுமே இதற்கு முன்பாக இந்த சட்டப்பிரிவு குறித்து பேசவில்லை என்பதால், இயல்பாகவே ரசிகர்களுக்கு அதன் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டு உள்ளது.

சட்டப்பிரிவு 49P

சட்டப்பிரிவை பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாமே என்று வலுவான ஒரு யோசனையை திரைப்படம் முன் வைக்கிறது. அரசியல் மாற்றங்களுக்கு இந்த சட்டப்பிரிவு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதையும், திரைப்படம் விவரிக்கிறது.

விளக்கம்

அது என்ன 49P என்ற கேள்வி படம் பார்க்காதவர்களுக்கு எழலாம். படம் பார்த்த சிலருக்கும் கூட விளக்கம் தேவைப்படலாம். இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் பேசினோம். அவர்கள் 49P இந்த சட்டப்பிரிவு நடைமுறையில் உள்ளது என்றுதான் தெரிவிக்கிறார்கள்.

தபால் ஓட்டு

49P சட்டம் என்றால் என்ன என்பதற்கு சட்ட புத்தகம் கூறும் விளக்கம் இதுதான்: எந்த ஒரு நபரின் வாக்காவது வேறு ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுவிட்டால், 49P பிரிவின்கீழ், ஒரிஜினல் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்கை பதிவு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதை போலவே, வாக்காளர் பெயர்-சின்னம் ஆகியவற்றுடன் கூடிய காகிதம் தரப்படும். அதில் தான் விரும்புவோருக்கு எதிராக பெருக்கல் குறியிட்டு, அதை மடித்து எடுத்து, ‘presiding ஆஃபீசரிடம்’ கொடுத்துவிட்டு கிளம்பலாம். அந்த வாக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டு என்ற வகையில் சேர்த்துக்கொள்ளப்படும். இதுதான் விஷயம். எனவே இதை அறிந்துள்ளோர்கள், இனிமேல் எனது ஓட்டை யாராவது போட்டுவிட்டார்கள் என்று புலம்ப தேவையில்லை. கள்ள ஓட்டு பிரச்சினையும் முடிவுக்கு வரும். கள்ள ஓட்டுகளால் கட்சிகள் வெற்றி பெற முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *