டைம்டேபிள் நேரத்தை கடந்து பட்டாசு வெடித்த 1500 பேர் மீது வழக்கு

சென்னை : தமிழகம் முழுவதும் நீதிமன்ற அறிவிப்பின்படி அரசு கொடுத்த நேரத்தில் பட்டாசு வெடிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு செய்த 1500 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.

உற்சாகமில்லை

வழக்கமான தீபாவளியாக இது இல்லையே என்ற நினைப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. எனினும் பெரும்பாலானவர்கள் நீதிமன்ற தீர்ப்பை மதித்து கொடுக்கப்பட்ட நேரத்திலேயே பட்டாசு வெடித்தனர். சென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது

1500 வழக்குகள் பதிவு

இதனிடையே அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் 1500 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. ராசிபுரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் 40 வயது சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திருவிடைமருதூர் அருகே மருதாநல்லூரில் 27 வயது சுபாஷ், 36 வயது ராஜவேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை டாப்

சென்னையில் 343 வழக்குகள், கோவையில் 184 வழக்குகள், மதுரையில் 109 வழக்குகளும் போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 51 பேர் மீதும் திருவண்ணாமலையில் 90 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

அரசாணையை மீறுதல்

கடலூர், விழுப்புரம்,திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசாணையை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *